நான் அங்கு இருந்திருந்தால் ரிஷப் பண்ட்டை கேப்டனாக விட்டிருக்க மாட்டேன்! பிசிசிஐ உறுப்பினர்

0
24

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டதை, நான் பொறுப்பில் இருந்திருந்தால் தடுத்திருப்பேன் என பிசிசிஐ-யின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியதால் பண்ட் நியமிக்கப்பட்டார்.

பண்ட்டின் தலைமையில் இந்திய அணி தொடரை 2-2 என சமன் செய்தது. எனினும் அவரது கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் தனது துடுப்பாட்டத்தில் சொதப்பினார்.

இந்த நிலையில், பண்ட் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினருமான மதன் லால் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் தேர்வுக்குழு பொறுப்பில் இருந்திருந்தால் பாண்ட் -ஐ கேப்டனாக விடாமல் தடுத்திருப்பேன். அனுமதித்திருக்க மாட்டேன். ஏனென்றால், இந்திய கேப்டனாவது பெரிய விடயம். அப்படிப்பட்ட ஒரு வீரருக்குப் பிறகு இந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.

பண்ட் ஒரு இளைஞன். அவர் எவ்வளவு காலம் விளையாடுகிறாரோ, அவ்வளவு முதிர்ச்சி பெறுவார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர் தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிந்தால், அவர் ஒரு நல்ல கேப்டனாக இருக்க முடிவதுடன், விடயங்களை பக்குவமாக சமாளிக்க முடியும்.


அவர் ஒரு வித்தியாசமான இயல்புடைய வீரர். எம்.எஸ்.தோனி ஒரு அமைதியான மற்றும் இயல்பான கேப்டன். அதேபோல் விராட் கோலி ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர். பண்ட் தனது துடுப்பாட்டத்தை சரியாக செய்யவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் விளையாடினால், அது நன்றாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.