வாழ்த்து கூறிய இசைஞானி இளையராஜாவுக்கு கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான பதிவு இதோ !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் 150 ரூபா கோடி வசூலும் உலகம் முழுவதும் ரூபா 400 கோடியையும் நெருங்கியுள்ளது. கமல் படங்களிலே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘விக்ரம்’ படம் பெற்றுள்ளது.

இப்படத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் மற்றும் ஏராளமான சினிமா ரசிகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் இளையராஜா தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பதிவில், “வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!. கமல்ஹாசன். மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்” என குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இளையராஜாவின் இந்த பதிவிற்கு நன்றி கூறும் வகையில் கமல்ஹாசன் தனது சமூகவலைத்தளத்தில் “நம் அன்பை எப்போதாவது தான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்” என தெரிவித்துள்ளார்.