குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு நாளை (22/11/2023) மற்றும் நாளை மறுநாள் (23/11/2023) மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இதன்படி, தமிழ்நாட்டின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள மலைவாசஸ்தலங்கள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், மழை பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.