தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர்கள் விஜய், அஜித் வருவார்கள் என்று நம்பிக்கை இருப்பதாகத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.
சென்னை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் தேனாண்டாள் முரளி இன்று (நவம்பர் 21) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ”’கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வசதியாகச் சென்னை சேப்பாக்கம் மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்படும்”.
மேலும், அவர் ” வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மழை இருக்காது என நம்புகிறோம். மழை பெய்தால், ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்படும். முதலில் நிகழ்ச்சிக்கு வர முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களின் தொடர் வலியுறுத்தலால் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சியில் கலைஞரின் வாழ்க்கை வரலாறு, அவரின் படைப்புகள், அவர் செய்த சாதனைகள் ஆகியவை குறித்து விளக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், கலைஞருடன் பணியாற்றிய திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். மேலும், நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.
“கலைஞர் நூற்றாண்டு விழா என்பது தமிழ் திரைத்துறையின் ஒரு முக்கியமான நிகழ்வு. இந்த விழாவில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வது சிறப்பு. விஜய், அஜித் ஆகியோர் தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர்கள். அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். எங்களின் கடமை அனைவரையும் அழைப்பதுதான், யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை!” என்று தேனாண்டாள் முரளி கூறினார்.