சென்னை : அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், ஆர்.எஸ்.எஸ் சார்பில் வழக்கறிஞர் பி.வி.சிவசங்கர் ஆஜரானார். காவல்துறை சார்பில் வழக்கறிஞர் சண்முகராஜ் ஆஜரானார்.
ஆர்.எஸ்.எஸ் சார்பில், அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி காவல்துறைக்கு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது காவல்துறை செப்டம்பர் 28-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், காவல்துறை இந்த வழக்குகளை விசாரிக்கத் தாமதம் செய்தது. இதனால், ஆர்.எஸ்.எஸ் சார்பில், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது” என வாதத்தை வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் நீதிபதிகள், ஏற்கனவே அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய தேதிகள் முடிவடைந்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்த பிறகு இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். இந்த உத்தரவுக்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் அதிருப்தி தெரிவித்துள்ளது.