இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (வயது 56) மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகினரையும், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நடிகர் மாரிமுத்துவின் பூர்வீகம் தேனி மாவட்டம் வருஷநாடு பசுமலை. திரையுலகில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, பாடலாசிரியர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.பின்னர் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். ராஜ்கிரண், மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் 2011 இல் யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வாலி, உதயா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் நடிகர் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் நடிகர் மாரிமுத்து. தீவிர பகுத்தறிவாளர் என்பதால் தொலைக்காட்சி விவாதங்களிலும் அதை வலியுறுத்தினார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவுக்கு இன்று காலை தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் மாரிமுத்து உயிரிழந்தார்.நடிகர் மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அங்கு அவர் கோயம்புத்தூரில் உள்ள தனது ரசிகர்களை உரையாற்றினார் மற்றும் அங்கு ஒரு நிகழ்விற்கு அவர்களை அழைக்கிறார். அவரது டிரேட்மார்க் டயலாக் “இந்தம்மா ஏய்..” மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடித்த தந்திரமான ஆதி குணசேகரன் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இருந்து என்றென்றும் எளிதில் நீக்கப்படாது.