அங்காடி தெரு சிந்து காலமானார்: வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து, தனது 44வது வயதில் மார்பக புற்றுநோயால் இன்று அதிகாலை 2.15 மணியளவில் காலமானார்.
மோசமான நிதி சூழ்நிலையில் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து, கடந்த சில ஆண்டுகளாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு உதவுமாறு திரையுலக பிரபலங்களை கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். சில பிரபலங்கள் சிந்துவின் சிகிச்சைக்கு உதவ முன் வந்தனர். ஆனால், கடைசியில் சிந்துவின் வாழ்க்கை வீணாகிப் போனது.2010 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு திரைப்படத்தில், மகேஷ் மற்றும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், நடிகை சிந்து ஒரு துணை வேடத்தில் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிந்து, சில படங்களில் நடித்துள்ளார். சிறுவயதில் இருந்தே ஏழ்மையில் வாடிய சிந்து, வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்தித்தார்.
குழந்தை திருமணம் & வலி நிறைந்த வாழ்க்கை
சிந்துவுக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. அதே ஆண்டில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த நடிகை சிந்து, தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தந்தையின் வீட்டிற்குத் திரும்பியதாகவும், தனது குழந்தையை காப்பாற்ற போராடியதாகவும் சமீபத்திய வேதனையான பேட்டிகளில் கூறியிருந்தார். .
சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தனது மார்பகங்களில் ஒன்றை மருத்துவர்கள் துண்டித்து விட்டதாக கண்ணீர் விட்டு அழுதார். இதுபோன்ற வலியுடனும் வேதனையுடனும் வாழ விரும்பவில்லை என்றும் கருணைக்கொலை செய்ய வேண்டும் என்றும் நடிகை சிந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 2.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அவரது திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதை நடிகர் கொட்டாச்சி தனது சமூக வலைதள பக்கத்தில் கனத்த மனதுடன் பதிவிட்டுள்ளார்.நடிகை சிந்துவின் மறைவுக்கு அங்காடி தெரு பிளாக் பாண்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தியடைய ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.