நடிகர் போஸ் வெங்கட் அக்காவும், தம்பியும் ஒரே நாளில் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமானவர். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் போஸ் வெங்கட். தொடர்ந்து பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, 2020ல் ‘கன்னிமடம்’ படத்தையும் இயக்கினார்.தற்போது, சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக போஸ் வெங்கட் உள்ளார்.இந்நிலையில், அவரது சகோதரி வளர்மதி நேற்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். சகோதரியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் மைத்துனர் ரங்கநாதன், அவரைப் பார்த்து கதறி அழுதார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடலில் விழுந்து உயிரிழந்தார்.
இவர்களின் இறுதிச்சடங்கு அறந்தாங்கியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அக்கா, தம்பியை இழந்து தவிக்கும் போஸ் வெங்கட்டிற்கு சமூக வலைதளங்கள் மூலம் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.