குழந்தை பிறந்த இளம் தாய்மார்களும் கோடைக்காலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலில் அதிகம் இருப்பது, நீர்ச்சத்துதான். அதனால் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அதைக் கோடைக்காலத்தில் இன்னும் கூடுதலாக எடுத்துக்கொள்வது நல்லது. அதைப்போல், குழந்தை பிறந்த உடன் தாய்மார்களுக்கு உணவு விஷயத்தில் பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். அது தேவையற்றது. எப்போதும் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் , நீங்கள் அதிக பழங்கள், காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேசமயம் இது கோடைக்காலம் என்பதால் முழு நேரமும் ஏ.சி. அறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கிடையாது. தினமும் வெளிக்காற்றில் காலாற நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. காலை நேரத்தில் சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்து, உடலுக்குப் போதுமானது என்பதால், அதுவும் காலை 7 முதல் 8 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
உங்களுக்குக் கர்ப்ப காலத்தில் சீக்கிரமாக நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டுவிடும் என்பதால், மதிய வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளியே செல்ல நேர்ந்தால் கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச்செல்ல வேண்டும். மேலும், நீங்கள் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கக் குடையைப் பயன்படுத்தலாம்.