ஒவ்வொருவரும் எடையிலும் உருவத்திலும் மாறுபட்டு இருப்பதால் ஒரே மாதிரியான நாற்காலி எல்லாருக்கும் பொருந்தாது. அதனால் உயரத்தை ‘அட்ஜெஸ்ட்’ செய்யக்கூடிய நாற்காலிகளையே தேர்ந்தெடுப்பது நல்லது.
கால்கள் தரையில் படும்படி நாற்காலியைச் சரிசெய்து உட்கார வேண்டும். நாற்காலியின் பின் பக்கத்தில் இருக்கும் சாயும் பகுதி 90 – 120 டிகிரி வரை வளையக்கூடியதாக இருக்க வேண்டும். தலையை சாய்த்து வைக்கக்கூடிய வகையிலான அமைப்பும் நாற்காலியில் இருக்க வேண்டும்.
அதேமாதிரி, கார் ஒட்டும்போது உட்காருவது போன்று உட்காருவது தான், ஆரோக்கியமாக உட்காரும் நிலை. நாற்காலியில் வசதியாகச் சாய்ந்து, நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும். உங்கள் கால் பாதங்கள் இரண்டும் கால் மூட்டுகளுக்கு முன்பாக நீட்டிக்கொண்டு இருக்க வேண்டும். உட்கார்ந்து பணியாற்றும்போது உடல் வளைந்தோ, கோணிய நிலையிலோ இருக்கக் கூடாது. மேலும், நீங்கள் உட்கார்ந்த நிலையில் இருக்கும்போது கணினியின் நடுப்பகுதி நாடிக்கு நேராக, சுமார் 14 இஞ்ச் இடைவெளியில் இருக்க வேண்டும்.
நாம் உடலை வளைத்து முன்னால் சென்று திரையைப் பார்த்தால், கண்கள் பாதிக்கப்படுவதோடு முதுகு தண்டுவடத்தின் வரிசையும் சீர்குலையும். அதனால், பணியின் நடுவில் 10 – 20 நிமிடங்கள் சிறிய இடைவெளிகள் எடுத்துக் கொள்வது அவசியம். நாற்காலியிலிருந்து எழுந்து அலுலக அறையிலேயே அங்கும் இங்கும் உலாவலாம்.
அதைபோல், நாற்காலியில் உட்கார்ந்தவாறே இடுப்பை முன்னால் வளைப்பது,தோள்பட்டைகளை முன்னும் பின்னுமாக அசைப்பது, நீண்ட மூச்சை இழுத்துவிடுதல் போன்ற எளியப் பயிற்சிகளும் தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.