திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் முதல் ‘மஞ்சப்பை’ விற்பனை இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது. இயந்திரத்தை திறந்து வைத்து இயக்கிய கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், 10 ரூபாய் மதிப்பிலான முதல் பையை பெற்றுக்கொண்டார்.இதையடுத்து, விற்பனை இயந்திரத்தை சோதனை செய்ய ஆர்வமாக இருந்த பொதுமக்கள் பலர் சுற்றுச்சூழலை பாதிக்காத பைகளை வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் வர்கீஸ், நீடித்த மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய இந்த மஞ்சப்பைகளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். “சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் பைகளுடன் ஒப்பிடும்போது இந்த துணிப் பைகள் மிகச் சிறந்த மாற்றாகும். மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி பேருந்து நிலையம் மற்றும் திருத்தணி முருகன் கோயில் வளாகங்களில் விரைவில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்படும்,” என்றார்.