கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’ செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிராமிய த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு இயக்குனர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் அனைத்து சிங்கிள் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி பிரமாண்டமான விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் வருவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இரண்டையும் ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
சிம்பு, சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது, ஆனால் இப்போது ரிலீசுக்கு முன்பே தெலுங்கிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.