நடிகர் அஜித்தை வைத்து படம் ஒன்றை இயக்கவேண்டும் என தனது விருப்பத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, வெற்றிக்கரமாக சினிமாவில் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை கெளரவப்படுத்தும் விதமாக பாரதிராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ், ‘விக்ரம்’ படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா என்னை பாராட்டினார் என்று கூறினார்.
பாரதிராஜா படத்தில் நான் அதிகமாக பார்த்து ரசித்தது டிக் டிக் டிக் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் ஆகிய இரண்டு படங்கள் மட்டும்தான். அந்த காலத்தில் இதுபோன்ற கதைகளை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கமலிடம் கேட்டேன். அதற்கு காரணம் பாரதிராஜா மட்டும்தான். எனக்கு நடிக்கும் ஆர்வம் இருந்ததால் கதையை பற்றி யோசிக்கவே இல்லை என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ், எனது அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
ரஜினி மற்றும் கமலை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாக வந்த செய்திக்கு பதிலளித்த அவர், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நடந்தால் மகிழ்ச்சி தான் என்று கூறினார்.
அதேபோன்று அஜித்துடன் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். இதுதவிர மற்ற முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றவேண்டும் என்று தனது விருப்பத்தை லோகேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.