தெரு ஓரத்தில் பிச்சையெடுத்த சிறுவன்! 10ம் வகுப்பில் படைத்த சாதனை

0
24

உத்திர பிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரம் பிச்சையெடுத்து வந்த சிறுவன், தற்போது பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை அன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில் ஷேர் அலி என்ற 17 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார்.

ஷேர் அலி வாழும் பகுதியிலிருக்கும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குப்பைகளைப் பொறுக்குதல், சாலையோரம் பிச்சையெடுத்தல் போன்ற தொழில்களையே செய்கிறார்கள்.

அப்பகுதியில் வசிப்பவர்கள் இதுவரை 10ம் வகுப்பு படித்ததே இல்லாத இத்தருணத்தில், குறித்த மாணவர் முன்னுதாரணமாகவும், முதல் நபராக 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஷேர் அலி ஆங்கிலப் பாடத்தில் மட்டும் 100-க்கு 80 மதிப்பெண்களை பெற்றுள்ள நிலையில், அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். தனது எட்டு சகோதரர்கள் மற்றும் பெற்றோர்களுடன் 8க்கு 8 அடி அறையில் வசித்து வரும் இவரது வீட்டில் மின்சார வசதி இல்லை.

அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் நரேஷ் பரஸ் என்பவர்தான், ஷேர் அலியை பிச்சையெடுக்கும் தொழிலிலிருந்து மீட்டு, பள்ளியில் சேர்க்கை பெற உதவியுள்ளார்.

குறித்த மாணவர் தான் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்துள்ள நிலையில், இவரது சகோதரி தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றாராம்.

எனது தேர்வு முடிவுகள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார்.

அவரது தாய் கூறுகையில், எனது பிள்ளைகள் பல நாள்கள் பசியோடு இருந்திருக்கிறார்கள். உணவில்லாத நிலையிலும் கூட பள்ளிச் செல்லாமல் இருந்ததில்லை என்று கனத்த மனதுடன் கூறியுள்ளார்.