மீண்டும் சிம்புவுடன் மோதும் தனுஷ் !!

0
26
simbu dhanush

பொதுவாக தமிழ்த்திரையுலகத்தைப் பொறுத்தவரை ’இருதுருவ மோதல்’ எனும் கான்செப்ட் காலங்காலமாக நிலைத்து வரும் ஒன்று. அந்த வகையில், எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என அதைத் தொடர்ந்து 2kகளின் ஆரம்பத்தில் மற்றொரு இருதுருவ ரசிகர்கள் பிளவு லேசாக ஆரம்பித்தது.அது தான் சிம்பு – தனுஷ். அந்தகாலகட்டங்களில் டீனேஜ் இளைஞர்களின் மத்தியில் இந்த மோதல் ஒர் சிறிய சலசலப்பாக இருந்ததென்றே சொல்லலாம். விஜய் – அஜித் ரசிகர் மோதல் அளவுக்கு இல்லாவிட்டாலும் அதற்கு ஓர் சிறு ஆரம்பமாக சிம்பு – தனுஷ் மோதல் இருந்ததென்பதே உண்மை.இந்த இரு தரப்பினரிடையான மோதல் எங்கு ஆரம்பித்ததென்று தெரியவில்லை.

ஆனால், நடிகர் சிம்பு சிலமுறை நடிகர் தனுஷை தன் பட வசனங்களில் வம்பிழுத்திருக்கிறார். ‘வல்லவன்’ படத்தில் ‘தேவதையைக் கண்டேன்’ தனுஷ் கதாபாத்திரத்தைக் கேலி செய்யும் வகையில் ஓர் வசனம் இடம்பெற்றிருக்கும்.ஏன், சமீபத்தில் வெளியான ’ஈஸ்வரன்’ திரைப்படத்தில் கூட ‘நீ அழிக்கிற அசுரன்னா.., நான் காக்குற ஈஸ்வரன் டா…!’ போன்ற வசனம் மூலம் தனுஷை நேரடியாகவே வம்பிழுத்தார், சிம்பு.

நடிகர் தனுஷும் அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தனது ட்விட்டரில் அசுரன் என பெயரை மாற்றிக்கொண்டார்.இந்நிலையில், தற்போது முதன்முறையாக இந்த இருவரும் நேரடியாக திரையரங்குகளில் போட்டியிடப் போகின்றனர். வருகிற ஆக.18ஆம் தேதி நடிகர் சிம்பு நடித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ வெளியாகிறது. அதே தேதியில் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தச்செய்தி இரு தரப்பினரின் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த இருவரும் நேரடியாக ஒரே நாளில் திரையரங்கில் மோதிக்கொள்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு தனுஷின் ‘மாரி’ திரைப்படம் வெளியாகும் தேதியில் சிம்புவின் ‘வாலு’ படம் வெளியாகவிருந்து பின் ‘வாலு’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதும் குறிப்பிடத்தக்கது.