விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

தமிழகத்தை தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயலின் காரணமாக டெல்டா பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. இந்தநிலையில், நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்றும் ரூ.600 கோடி நிவாரணம் வரும் 7-ம் தேதி முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புயல் பேரிடரால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், இடுபொருள் நிவாரணம் வழங்க உச்சவரம்பில் தளர்வளிக்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுமைக்கும் நிவாரணம் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பாக விவசாய பொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், தற்போது அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மானாவரி, நீர்ப்பாசன வசதிபெற்ற நெற்பயிருக்கான நிவாரண தொகை ரூ.13,500 ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பல்லாண்டு கால பயிருக்கு நிவாரணத்தொகையாக ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.