உங்க கட்சிக்காரங்களே சிரிப்பாங்க… எடப்பாடியை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

நான் ஒரு விவசாயி, விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் கிடையாது என சொல்ல ஆரம்பித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதை கேட்டால், அதிமுகவினரே சிரிப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின், “நான் ஒரு விவசாயி, விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் கிடையாது என சொல்ல ஆரம்பித்துள்ளார் பழனிசாமி. அதிமுகவினரே இதை கேட்டால் சிரிப்பார்கள். கொள்ளையடிப்பது எப்படி என்று புத்தகம் எழுதுவதற்கு தகுதி வாய்ந்த ஒரு நபர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் தான் எடப்பாடி பழனிசாமியின் அரசு.

சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை தனது உறவினர்கள், பினாமிகளுக்கு கொடுத்த எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை பாஜகவுக்கு அடமானம் வைத்துவிட்டார். ஜெயலலிதாவால் வழி நடத்தப்பட்ட அதிமுகவை பாஜகவிடம் குத்தகைக்கு விட்டுவிட்டார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும் எதிர்த்துப் போராடும் பாஜக அரசின் வேளாண் சட்டங்களை ஒரே ஒருவர் மட்டும் ஆதரித்துப் பேசி வருகிறார். அவர் தான் எடப்பாடி பழனிசாமி.

ஒரு கொள்ளைக் கும்பல் தங்களது தலையைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டது. இதை உண்மையான அதிமுக தொண்டர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே அவமானச்சின்னம் என்றும் குற்றம் சாட்டினார்.