கொரோனா வைரசுக்கான தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக போடுவோம் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த உடன் கேரளாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் அரசு செலவில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து இருந்தார்.

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்புக்கு எதிராக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவித்தது தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயனிடம், அம்மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.