முதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த நாடு தெரியுமா?

ஆப்பிரிக்க நாடான எஸ்வாதினியின் பிரதமர், கொரோனாவுக்கு பலியாகும் முதல் உலகத் தலைவர் என்பது தெரிய வந்துள்ளது.

ஸ்வாசிலாந்து என முன்னர் அறியப்பட்ட எஸ்வாதினி நாட்டின் பிரதமரான 52 வயது ஆம்ப்ரோஸ் லாமினி என்பவரே கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

நவம்பர் 16 ம் திகதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரதமர் ஆம்ப்ரோஸ் லாமினி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அரசின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், தாம் நலமுடன் இருப்பதாகவே லாமினி தெரிவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை, எஸ்வாதினி அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா, பொலிவியா ஜனாதிபதி ஜீனைன் அனெஸ், பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோர் குணமடைந்து பணிக்கும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.