ரஜினியுடன் கூட்டணியா?: கமல் விளக்கம்

சென்னை: மதுரையில் பிரசாரத்தை துவங்கியுள்ள மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மையத்தின் ஆதரவு விவசாயிகளுக்கு இருக்கும். ஊழல் ஒழிப்பு என்பது மேல் மட்டத்தில் இருந்து மாறவேண்டிய விஷயம். கீழ் மட்டத்தில் இருப்பவர்களை தண்டிப்பதில் பலனில்லை. மேல் மட்டத்தை சரிசெய்தால் தான் சரிவரும். மதுரையில் தொடங்கியுள்ள பிரசாரம், புரட்சிக்கான ஆரம்பம் என்பதை தொண்டர்கள் காண்பித்துள்ளனர்.சட்டசபை தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன், எந்த தொகுதியில் போட்டி என்பது பிறகு அறிவிப்பேன். நான் நேர்மையை வைத்து அரசியல் செய்வேன். ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பேன். மற்ற கட்சிகள் அப்படியில்லை. வெகுசிலருக்கு மட்டுமே நேர்மை இருக்கிறது.

நான் பா.ஜ.,வின் ‘பி’ டீம் கிடையாது. ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். ரஜினியை வைத்து பாஜ., அரசியல் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்; சினிமா வேண்டுமானால் செய்வார்கள். எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் தூக்கம் வராத நிலையில் உள்ளனர்.37 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் என்னிடம் அரசியல் ஆசை இருக்கிறதா எனக் கேட்டார்.

அப்போது, அதான் நீங்கள் (எம்ஜிஆர்) இருக்கிறீர்களே என நான் கூறினேன். அப்போது நான் அரசியல் வருவேன் என நினைக்கவில்லை. அடுத்தவர் நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை கூற மாட்டேன். நான் நாத்திகன் அல்ல, பகுத்தறிவாதி.

கார்ப்பரேட் நிறுவனங்களே வேண்டாம் என்பது மடமை. நகரம், பெருநகரமாக மாற கார்ப்பரேட் நிறுவனம் தேவை. சிறு, குறு தொழில்கள் கார்ப்பரேட்டிற்கு சமமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.