சித்ராவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தொல்லை கொடுத்த சீரியல் குடும்பத்தினர் கலக்கத்தில் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே புகழ்பெற்ற நடிகை சித்ரா சென்னையில் உள்ள ஹொட்டலில் நேற்று முன் தினம் தங்கியிருந்தார்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஹேமந்த் என்பவரை அவர் கரம் பிடித்த நிலையில் தம்பதி இருவரும் சேர்ந்தே ஹொட்டலில் தங்கினர்.

முறைப்படி ஊரறியத் திருமணம் நடக்காத நிலையில், காதல் கணவருடன் ஒரே அறையில் தங்கி இருப்பது குறித்து சித்ராவின் தாயார் கண்டித்ததாகக் கூறப்படுகின்றது. ஹேமந்த் மீது சில குற்றச்சாட்டுக்களையும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தாயிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சித்ரா, அதிகாலை 3 மணியளவில் தனது கணவர் ஹேமந்தை வெளியில் போக சொல்லிவிட்டு உள்ளே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையில் இறுதியாக அவரது தாயாருக்கு சித்ரா வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருப்பது தெரியவந்தது. அதில் ஹேமந்த் என் கணவர், எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஒரு மாதகாலமாகவே சித்ராவின் வீட்டில் காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் ஒருபக்கம், படப்பிடிப்பில் ஏற்பட்ட பணிச்சுமை ஒரு பக்கம் என சித்ரா தவித்துள்ளார்.

இதோடு செல்போனில் சித்ராவுக்கு நன்கு தெரிந்த சீரியல் குடும்பத்தினரான சில நடிகர், நடிகைகள் தொல்லை கொடுத்ததாக பொலிசாருக்கு தகவல் வெளியான நிலையில் அது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சம்மந்தப்பட்டவர்கள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சித்ராவின் கணவர் ஹேமந்த், ஹொட்டல் ஊழியர் கணேசன், சித்ராவின் பெற்றோர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீஸ் தரப்பில் கூறுவது என்ன..?

படப்பிடிப்பு தளத்தில் சித்ராவுடன் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவருகிறது காவல்துறை.
சித்ரா உயிரிழந்த வழக்கில் அவருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அளிக்க காவல்துறை முடிவெடுத்துள்ளது.
சமீபகாலமாக சித்ரா தொலைபேசி மூலம் யாருடன் அதிகமாக பேசியிருக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
சித்ராவினுடைய நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து விசாரித்து, விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்த உள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்தது தற்கொலையா அல்லது கொலையா என, காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சந்தேகத்தை அடுத்து இத்தகைய விசாரணை தீவிரப்படுத்தி பல்வேறு கோணங்களில் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கூறுவது என்ன..?
சற்று முன் வெளியான பிரேத பரிசோதனையின் முதல்கட்ட தகவலின்படி, சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது .மேலும், நடிகை சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல்களும் அவரருடையதுதான் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சித்ராவின் உடற்கூராய்வு முடிந்துவிட்டதால், உடல் அவரது குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டு, கோட்டூர்புரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை ஊர்வலமாக எடுத்து சென்று பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல சர்ச்சைகள் நிரம்பியுள்ள இவரதுமரணம் தற்கொலை அல்ல கொலைதான் என சித்ராவின் தாயார் உட்பட பலரும் கூறி வரும் நிலையில், சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டிருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.