ரஜினிக்கு போட்டியாக தளபதி நீங்க அரசியலுக்கு வாங்க.. மொட்டை அடித்து அழைப்பு நீங்களே பாருங்க !

நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 27-ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 28-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் நாள். அதைக் கொண்டாடும் வகையிலும், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்ட `தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்’ 108 திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் மூன்று பேர் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். “வென்றால் மக்கள் வெற்றி. தோற்றால் மக்கள் தோல்வி” என்று அவர் அறிவித்திருக்கிறார். நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக அவருடைய தந்தை எஸ்.ஏ.சி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோது, நடிகர் விஜய் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். இதனால் விஜய் குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவிவருகிறது.

இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் விஜய் ரசிகர்கள் மூன்று பேர் பரிமள ரெங்கநாதர் கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில், கொட்டும் மழையினூடே மொட்டையடித்துக்கொண்டனர். தொடர்ந்து, பரிமள ரெங்கநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

இது பற்றி விஜய் மக்கள் இயக்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் குட்டிகோபியிடம் பேசினோம். “ஆண்டுதோறும் தலைவரின் கலைத்துறைப் பிரவேச நாளில் பிரசித்திபெற்ற கோயில்களில் வழிபாடு செய்து அவர் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வது வழக்கம். அதுபோல் இன்று திரைத்துறையில் 28-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தலைவருக்காக, திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோயிலில், தலைவரின் பெயர் மற்றும் அவரின் கடக ராசி, பூச நட்சத்திரம் பெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தோம்.

அதற்கு முன்னர் தலைவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், கோமல் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார், கலையரசன், மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் ஆகிய மூன்று ரசிகர்கள் மொட்டையடித்துக்கொண்டார்கள். அதன் பின்னர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்தோம். இதுபோல் தலைவர் கலைத்துறையில் பல ஆண்டுகள் பயணம் எப்போதும் வெற்றிபெற வேண்டும். அதுபோல் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து, அந்தப் பயணத்திலும் வெற்றியடைய வேண்டும். அதற்குத் தலைவர் முன்வர வேண்டும் என்பதே எங்களின் வேண்டுதல்” என்றார்.