திமுகவின் முன்னாள் எம்.பி.அக்னி ராஜ் இறப்பிற்கு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் ஆறுதல் தெரிவித்து இருந்தார். ஆனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி அவருடைய வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதுபோல மதுரையின் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகி எஸ்.ஆர்.கோபியின் சகோதரர் மருது சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து துக்கம் விசாரிக்க யாரும் வரவில்லை. ஆனால், முக அழகிரி அவரது வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறினார்.

அத்துடன் அடுத்தடுத்து திமுக நிர்வாகியின் இல்லங்களுக்கு நேரில் சென்று சந்திக்க இருப்பதாகவும் இது திமுகவினருக்கு திணறலை ஏற்படுத்தி இருப்பதாகவும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கோபியின் வீட்டிற்கு சென்றதற்கு பின் பல காரணங்கள் இருக்கின்றது. திமுகவில் பொறுப்பில் உள்ள பலரும் அழகிரியுடன் தொடர்பில் தான் இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் விதமாக இது அமைந்துள்ளது.

தற்போது கோபி திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்கிறார். அழகிரியை சந்தித்த பின்னர் திமுக மீதான நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும். இவர்கள் வேறு வழியில்லாமல் அழகிரி பக்கம் வந்து தான் ஆக வேண்டும். முக்கிய நிர்வாகி வெளியேறும் பட்சத்தில் திமுக பலவீனமாகும்.

திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவைப் பெருக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளார் முக அழகிரி. இதன்காரணமாக ஸ்டாலின் நெருக்கடியில் இருக்கிறார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.