தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிந்து.

இணைந்த கைகள், பரம்பரை, நம்ம வீட்டு கல்யாணம், ஏ.வி.எம் தயாரித்த அன்பே அன்பே உள்பட 60 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

பின்னர் மிகவும் பிரபலமான சீரியலான மெட்டி ஒலியில் முக்கிய கதாபாத்திரத்தில் சிந்து நடித்தார்.

கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட சிந்து திருமணமான 10 ஆண்டுகளில் அவரை பிரிந்தார்.

அவர் மூலம் சிந்துவுக்கு மகள் உள்ளார். இதன்பின்னர் பிரபல தொலைகாட்சி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு சுனாமி கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக சென்னை அண்ணாநகரில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் சிந்து ஆர்வமாக கலந்து கொண்டு 10 கி.மீ தூரம் நடந்து சென்று நிதி திரட்டினார்.

அப்போது மதியம் 2 மணியளவில் மயங்கி நடுரோட்டில் விழுந்த சிந்து பேச முடியாமல் தவித்தார். உடனே அவரை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் சிந்துவின் உடல் நிலை மோசம் அடைந்து கவலைக்கிடமாக இருந்தார். பின்னர் சிந்துவுக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது உயிரை காப்பாற்ற முடிய வில்லை. நினைவு திரும்பாமல் சிந்து மரணம் அடைந்தார்.

வெறும் 33 வயதில் சிந்து மரணமடைந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அந்த சமயத்தில் பலத்த சோகத்தில் ஆழ்த்தியது.