ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் ஷூட்டிங்கை வரும் ஜனவரிக்குள் படக்குழு முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தினை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். ‘நேர்கொண்ட பார்வை’-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்தது.

’ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம்தான், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடந்தது. அதில், அஜித் பைக் ரேசிங் காட்சிகளிலும் நடித்தார். தற்போது, ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சமீபத்தில் அஜித்துக்கு படப்பிடிப்பில் சிறய விபத்தும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படம்தான் கடைசியாக வெளியானது. ‘வலிமை’ இந்த வருடம் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால் 6 மாதங்கள் சினிமா ஷூட்டிங்கிற்கு தடைவிதிக்கப்பட்டதால் அனைத்துப் படங்களும் தள்ளிப்போயின. இந்த வருடம் அஜித் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அடுத்த வருடம் கோடைகாலத்தில் நிச்சயம் ‘வலிமை’ படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது படக்குழு. இதனால், வரும் 2021 ஜனவரிக்குள் படத்தை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளார்.