பேசிய அடுக்குமொழி வசனமெல்லாம் வீணாப்போச்சே!…தயாரிப்பாளர் தேர்தலில் டி.ராஜேந்தர் படு தோல்வி

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் எப்போதும் பரபரப்புகளுக்கு பெயர் போனது. தேர்தல் இல்லாமலேயே சரத்குமாரும், ராதாரவியும் தன் வசம் வைத்திருந்த தயாரிப்பாளர் சங்கத்தை விஷால், கார்த்தி, நாசர் அணி களம் இறங்கி தேர்தலை நடத்தி கைப்பற்றியது.

அதன்பின் விஷாலுக்கு எதிராக சில தயாரிப்பாளர்கள் களம் இறங்கி நீதிமன்றம் சென்றனர். எனவே, தயாரிப்பாளர் சங்க நடவடிக்கை ஒரு அரசு அதிகாரியின் கீழ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதன்பின், மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, விஷால் அணியும், பாக்கியராஜ் அணியும் போட்டியிட்டது. ஆனால், அதிலும் பஞ்சாயத்து ஆகி தற்போது வரை தீர்ப்பு கூறப்படவில்லை.

சமீபத்தில் மீண்டும் தயாரிப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், டி.ராஜேந்தர் ஒரு அணியும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஒரு அணியாகவும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இந்த தேர்தலில் 557 வாக்குகள் பெற்று முரளி வெற்றி பெற்றுள்ளார். டி.ராஜேந்தர் 388 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

சங்கத்தின் மற்ற நிர்வாகிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். அடுக்கு மொழியில் பேசி வந்தார். ஏற்கனவே வினியோகஸ்தர் சங்க தலைவராக இருக்கும் இவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டார். இந்நிலையில்தான் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.