34வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.

13வது ஐபிஎல் தொடர் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஷார்ஜாவில் வைத்து நடைபெற்ற 34வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணி தவானின் சதம் மற்றும் கடைசி ஓவரில் அக்சர் பட்டேலின் அதிரடியால் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. .

இந்த போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோவிற்கு ஒரு ஓவர் மீதமிருக்கும் நிலையில் ஜடேஜாவிடம் ஓவர் கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து போட்டிக்கு பின்பு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில், “பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால், களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. அதனால் எங்களுக்கு இரண்டு ஆப்ஷன் இருந்தது. ஒன்று கரண் ஷர்மா அல்லது ஜடேஜா.

இதில் ஜடேஜாவை தேர்வு செய்தேன். அது சரியாக அமையவில்லை” என்று கூறினார்.