இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் மிகுந்த நற்பலன்களைப் பெறுவார்கள்.

மற்ற ராசிக்காரர்கள் ராகு-கேதுக்களின் பாதசார பலம்அறிந்து, யோகபலம் பெற்ற நாளில், வரம் தரும் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடுகளையும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களையும் மேற்கொண்டால் துன்பங்களில் இருந்து விடுதலை பெறமுடியும்.

மேலும், வாய்ப்பிருக்கும் பொழுது ஆலயம் சென்று வழிபடலாம். அதுவரை இல்லத்து பூஜை அறையிலேயே நாக கவசம் பாடி வழிபட்டு வருவதோடு, சர்ப்ப விநாயகர் படத்தை வைத்து சதுர்த்தி நாளில் விநாயகருக்குரிய துதிப்பாடல்களைப் படித்து வழிபடலாம்.

சுய ஜாதகத்தில் ராகு-கேதுக்கள், லக்னம் அல்லது சந்திரனில் இருந்தால் சர்ப்ப தோஷம் என்பார்கள். மேலும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் எண்ணற்ற பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

குடும்பத்தில் குழப்பங்கள், வேலைவாய்ப்பு இழப்பு, பணப்பற்றாக்குறை, எவ்வளவு முயற்சி செய்தும் காரியங்கள் கை கூடாத நிலை, திருமணம், புத்திரப்பேறு தடை, உடல்நலக் குறைபாடுகள் போன்றவை ஏற்படலாம்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக பொருளாதாரத்தை சீர் செய்து சமாளிக்கும் சூழ்நிலை படிப்படியாக மக்களிடம் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில்கள், மருத்துவம், உணவுப்பொருள் சம்பந்தப்பட்ட தொழில் புரிவோர் நற்பலன் பெறுவர்.
மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கும் நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஜனவரி 2021-க்கு மேல் படிப்படியாக அனைவரும் ஆரோக்கியம் பெறும் சூழ்நிலை உருவாகலாம்.

புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வியாதிகளைக் குணமாக்கும் முயற்சியில் கூடிய விரைவில் மருத்துவ உலகம் வெற்றி காணும். அரசும், மருத்துவ வல்லுனர்களும் சொல்லும் ஆலோசனைகளை ஏற்று நடப்பதோடு, சுயக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நோயின் தாக்கத்தில் இருந்து நாம் விடுபட இயலும்.

தங்கம், வெள்ளி போன்றவைகளின் விலை உயர்ந்து இடையிடையே ஓரளவு குறையலாம். தனி மனித வருமானம் குறையும்.

சனிப்பெயர்ச்சி காலத்தில் இயற்கை சீற்றங்கள், கால்நடைகளுக்கு வினோத நோய்கள் பரவுதல், புதிய தொற்று நோய், வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படலாம்.
அரசியல் களம் சூடுபிடிப்பதோடு, ஆச்சரியப்படும் விதத்தில் கூட்டணிகளில் மாற்றம் உருவாகலாம்.

பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலைகள் ஏற்ற இறக்க நிலையிலேயே இருக்கும்.

எனவே எந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் இஷ்ட தெய்வம், குலதெய்வம், திசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து, கோட்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களுக்குரிய தெய்வங் களைத் தேர்ந்தெடுத்து வழிபாடு செய்வதன் மூலம் வளர்ச்சியைக் காணலாம்.