டான்ஸராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என்று அடுத்தடுத்து புது அவதாரங்கள் எடுத்தவர் ராகவா லாரன்ஸ்.

சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த அமர்க்களம் படத்தில் வந்த மகா கணபதி பாடல் மூலம் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய பெயரும், புகழும் கிடைத்தது. இந்நிலையில் அவர் மகா கணபதி பாடல் பற்றி ராகவா லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார். அதில், “மகா கணபதி பாடல் மூலம் தான் என் கெரியர் துவங்கியது. எனக்கு இந்த வாய்ப்பு அளித்த சரண் சார் மற்றும் அஜித் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அற்புதம் திரைப்படம் மூலம் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக அறிமுகமானார். ‘முனி’ ராகவா லாரன்ஸுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு அவர் முனி படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களையும் இயக்கி நடித்தார்.

அமர்க்களம் படத்தால் தன் கெரியர் ஆரம்பமானதாக தெரிவித்த ராகவா லாரன்ஸ், தான் டான்ஸ் மாஸ்டர் ஆகக் காரணமாக இருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த உதவிகளையும் மறக்கவில்லை. நன்றி மறவாத இந்த நல்ல குணத்தால் தான் ராகவா லாரன்ஸ் நன்றாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.