இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என தொடர்ந்து நான்கு திரைப்படங்களில் தல அஜித்குமார் நடித்தார். இதில், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ந்து இரு படங்களை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்தது.

கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘விவேகம்’ திரைப்படத்தில் அக்ஷரா ஹாசன் திரையுலகிற்கு அறிமுகமானார். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்க்கு இது தமிழில் முதல் திரைப்படமாக அமைந்தது. எதிர்ப்பார்த்த வெற்றியை இத்திரைப்படம் பெறவில்லை என்றாலும், படத்தின் பாடல்கள் மற்றும் தலயின் மெனக்கெடல்கள் ரசிகர்களிடையே பெரிதும் பாராட்டப்பட்டது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தலை விடுதலை’ பாடல் இன்னமும் இளைஞர்களின் ரிங் டோனாக இடம்பெற்றுள்ளது.

இத்திரைப்படத்திற்கு அடுத்து வெளியான விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, வசூலிலும் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியது.
தற்போது அஜித்குமார் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விவேகம் திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு வெற்றிவிழாவை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.