காதல் திருமணம் செய்துகொண்ட இரண்டரை மாதங்களில் இளம்தம்பதி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீண்குமார் (22). இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரும், ஈசா பல்லாவரத்தை சேர்ந்த தீபிகா(19) என்ற பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே மாதம் 8-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் இருவரும் தஞ்சம் புக, போலீசார் இரண்டு வீட்டினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்தனர். இந்த நிலையில் ஆடி மாதம் என தீபிகா அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு 10 நாட்கள் இருந்த நிலையில் அவர் கடந்த 30-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் தீபிகா தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரவீண்குமார் தீபிகா தன்னிடம் அன்பாக இருந்தார் என்றும், சம்பவ தினத்தன்று அவர் போன் செய்து தான் எடுக்கவில்லை என்று அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார். தீபிகா வீட்டினர் கோபமாக இருப்பதால் அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என போலீசார் பிரவீனுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

மேலும் இன்று காலை விசாரணைக்கு வரும்படி அவரிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால் மனைவி இறந்த சோகத்தில் இருந்த பிரவீன்குமார் நேற்று குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.