குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மட்டும் தான் பால் அவசியம் குடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறானது.

பால் குடிப்பது மிகவும் நல்லது. பாலில் ஒருவரின் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன.

இருப்பினும், வயதிற்கு ஏற்ப குடிக்கும் பாலின் அளவு வேறுபடும். உதாரணமாக, குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு பலமுறை பால் குடிக்க கொடுக்க வேண்டும். அதே சமயம் பெரியவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட பால் குடிக்கலாம்.

பால் ஒரு உலகளாவிய உணவு மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஒருவர் எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்பது வயதைப் பொறுத்தது. பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவு வகைகளைப் போலவே பால் கட்டாயம் உணவில் சேர்க்கப்பட வேண்டிய முக்கியமான உணவாகும்.

தற்போதைய நாட்களில் உடல் எடையைக் குறைக்க மக்கள் சைவ உணவாளராக மாறுகின்றனர் அல்லது பால் குடிப்பதைக் குறைக்கிறார்கள். ஆனால் இது பால் மற்றும் ஆரோக்கியத்தின் மீதான நமது அலட்சியத்தைக் காட்டுகிறது.

இக்கட்டுரையில் வயதுக்கு ஏற்ப எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் அதைப் பின்பற்றி ஆரோக்கியத்தைப் பேணுங்கள்.

0 முதல் 6 மாதங்கள்
புதிதாக பிறந்த குழந்தைக்கு குறைந்தது ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில், இந்த காலத்தில் குழந்தைக்கு அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படும்.

இந்த சத்து குழந்தைக்கு தாயின் பாலில் இருந்து கிடைக்கும். ஆகவே 6 மாதம் வரை குழந்தைக்கு சரியான இடைவெளியில் பால் கொடுக்க வேண்டும். தினமும் சுமார் 600 மிலி பால் கொடுப்பது மிகவும் முக்கியம். அப்போது தான் குழந்தைக்கு சரியான அளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.

6 மாதம் முதல் 1 வயது வரை
6 மாதங்கள் முதல் சுமார் 1 வயது வரையிலான குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எதையும் சாப்பிட கொடுக்க முடியும். ஆனால் குழந்தைக்கு பால் மிகவும் முக்கியமானது. இந்த வயதிற்குட்பட்ட குழந்தைக்கு தினமும் 600-700 மிலி பால் கொடுக்க வேண்டும்.

1 முதல் 2 வயது வரை
இந்த வயதில் குழந்தை அனைத்தையும் சாப்பிட ஆரம்பிக்கும் வயதாகும். பெரும்பாலான குழந்தைகள் இந்த வயதிலும் தாயின் பாலைக் குடிக்க கேட்பார்கள். பல குழந்தைகள் பாக்கெட் பால் குடிக்கும் போது வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறார்கள். அவ்வாறு செய்தால், அவர்களுக்கு அம்மாதிரியான பால் கொடுப்பதைத் தவிர்க்கவும். இந்த வயதில் குடிக்க வேண்டிய பாலின் அளவைப் பற்றி பேசுவதானால், இந்த வயது குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 800-900 மிலி பால் கொடுக்க வேண்டியது அவசியம்.

3-8 வயது
இந்த வயது குழந்தையின் உடலின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான வயது. இந்த வயதில் குழந்தைகளுக்கு அதிக காயங்கள் ஏற்படும். இதை தவிர்க்க அவர்களுக்கு பால் மிகவும் அவசியம். குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற, இந்த வயதில் குழந்தைகளுக்கு தினமும் குறைந்தது இரண்டரை கப் பால் கொடுக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். அத்துடன், பால் சம்பந்தமான உணவுப் பொருட்களையும் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

9-15 வயது
9 வயதில் பாதி குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக இருப்பார்கள். ஆனால் இன்னும் பாதி வளர்ந்து வரும் நிலையில் உள்ளதால், பால் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. 9 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினமும் 3 கப் பாலுக்கு மேல் கொடுக்க வேண்டும். மேலும் அவர்கள் டீனேஜ் வயதிற்குள் நுழைவதால், சுமார் 300 கலோரிகள் தேவைப்படும். ஆகவே தினமும் அவர்களுக்கு 4 கப்பிற்கும் அதிகமாக பால் கொடுக்க முயற்சி செய்யவும்.

15 வயதிற்கு மேல்
நீங்கள் அல்லது உங்கள் குழந்தை 15 வயதிற்கு மேல் இருந்தால், ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான உணவு தேவை. அதேப் போல் தினமும் பால் குடிக்க வேண்டியதும் அவசியம். அதுவும் ஒரு நாளைக்கு 1 முதல் 1 1/2 டம்ளர் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்குத் தேவையான தினசரி ஊட்டச்சத்தை எளிதில் பெற முடியும்.