உலகின் முன்னணி தேடுபொறி சேவைகளில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, பயனாளர்களின் தகவல்களைத் திருடும் 100க்கும் மேற்பட்ட தீங்கு விழைவிக்கும் மால்வேர் இணைப்புகளை கூகுள் நிறுவனம் சமீபத்தில் அதிரடியாக நீக்கியது. இதைத் தொடர்ந்தே மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது.

இந்தியாவில் இனணயவழி (சைபர்) தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், இணைய வழித்தடத்தை பாதுகாப்பதற்கும் தேசிய தொழில்நுட்பக் குழுவான இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை பதில் குழு (சி.இ.ஆர்.டிஇன்) செயல்படுகிறது.

மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமாக இந்த நிறுவனம் இணைய பயனர்களுக்கு முற்றிலும் தேவைப்படும் எக்ஸ்டென்ஷன்களை மட்டுமே நிறுவவும், அவ்வாறு செய்வதற்கு முன்பு பயனர் மதிப்புரைகளைப் பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பயன்பாட்டில் இல்லாத எக்ஸ்டென்ஷன்களை நீக்கம் செய்ய வேண்டும், பயனர்கள் சரிபார்க்கப்படாத தளங்களில் இருந்து எக்ஸ்டென்ஷன்களை நிறுவக்கூடாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.