இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாகவே பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள், துறையில் இருக்கும் வாரிசு அரசியல் குறித்தும் அவர்களுக்குக் கிடைத்த மோசமான அனுபவங்கள் பற்றியும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோலும் விருது நிகழ்ச்சிகளில் தனக்கு காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். இதையொட்டி இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த அஸ்வின் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

அதில், “வெளியிலிருந்து வரும் ஒரு ஆள் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் கொண்டாடப்படுகிறார். உங்களை ஒதுக்கி, உங்கள் முயற்சிகளை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி, முதுகில் குத்துவார்கள். ஆனால் ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்ய இந்த கசப்பான அனுபவங்கள் அத்தனையையும் தாங்க வேண்டும்” என நடிகர் அஸ்வின் தனது கருத்தினை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அஸ்வினின் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு முன்னணி ஆடை வடிவமைப்பாளரான வாசுகி பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், “நமது தமிழ் சினிமா திரையில் ஏராளமான சுஷாந்த்கள் உள்ளனர். சம்பளம் வாங்காமலும், ஆதரவு இல்லாமலும், அடையாளம் இல்லாமலும். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கேமராவுக்கு முன் தைரியமாகக் காட்டிக்கொண்டு புன்னகைக்கின்றனர். சிலர் என்னிடம் பேசுகிறார்கள், சிலர் அவமானத்தினால் ஏற்படும் வலியுடன் அமைதி காக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு, தல அஜித்தின் அப்போதைய நிலையையும் இன்றைய நிலையையும் நினைத்துப் பாருங்கள்” என பேசியுள்ளார்.

யாருடைய தயவும் இன்றி உதவிகளும் இன்றி வெற்றி தோல்வி என அனைத்தையும் தனி ஒருவனாக எதிர்த்து நின்று இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக அஜித் வளர்ந்து இருக்கிறார் என்றால் அது குறிப்பிடத்தகுந்தது தான்.