தமிழ் சினிமாவில் தல என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நம்ம தல அஜித். இவர் தற்போது தன்னுடைய 60வது திரைப்படமாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

வலிமை படத்தை பொறுத்தவரை டைட்டில் மட்டுமே இதுவரைக்கும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்ப்டுள்ளது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு ஆரம்பமானது. முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அங்கு சில அதிரடியான சண்டை காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அங்கு ஒரு அதிரடியான பைக் சேசிங் காட்சி மற்றும் அஜித் ஹியூமா குரேஷி இடையேயான சில காட்சிகளும் எடுக்கப்பட்டது.

இனி மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம், ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பமாகுமென கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸிலும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம். அதற்காக ஏற்கனவே பிரம்மாண்டமாக ஜெயில் செட் அங்கு போடப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்கள் எல்லாருமே இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டருக்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் போனிகபூர் பல இடங்களில் ‘இது குடும்பத்துடன் அனைவரும் பார்க்க கூடிய, அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும்’ என குறிப்பிட்டு கூறி வருகிறார். அதோடு திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமானால், 2021 பொங்கல் அல்லது சம்மருக்கு இந்த படம் வெளியாகுமாம்.

இந்த நிலையில் வலிமை அஜித்தை வைத்து இன்னொரு மாஸ்டர் ப்ளான் போடுகிறாராம் போனிகபூர். அதன்படி இதற்குமுன் போனிகபூர் தயாரித்து, அவர் மனைவி நடித்த மம் திரைப்படம் சைனாவில் வெளியாகி, வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்தது. போனிகபூருக்கு அந்த படம் நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. அந்த வகையில் தல அஜித்தின் வலிமை படத்தை, சைனாவில் வெளியிட வேண்டுமென போனிகபூர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளிலும் அவர் இறங்கி விட்டாராம்.

இதற்காகவே கதை விவாதத்தின் போது வினோத்திடம் சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார் போனிகபூர். அந்த வகையில் வலிமை படத்தின் கதையமைப்பே பொதுவாக அனைத்து நாட்டினரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக காட்சிகளில் செயற்கைதனம் இல்லாமல், ரியலான சண்டை காட்சிகள், உணர்வுபூர்வமான காட்சிகள் என உருவாகி வருகிறதாம் வலிமை. அப்போ வலிமை படத்தின் வெளிநாட்டு வசூல் பட்டைய கிளப்ப போகிறது என்றே கூறலாம்.