தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார், முன்னாள் ஹீரோயின்.

சினிமாவில் ஏழு, எட்டு வருடங்கள் நிலைத்து நிற்கும் நடிகைகள், பிறகு யாராவது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடுவார்கள்.

இப்படித்தான் பல நடிகைகள் செய்துள்ளனர். இல்லை என்றால் உடன் நடிக்கும் நடிகரையோ, இயக்குனரையோ காதலித்து திருமணம் செய்துகொள்வதும் உண்டு.ஆனால், கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமலே இருக்கும் நடிகைகள், ஒரு சிலர்தான். அதில் ஒருவராக இருக்கிறார் இந்த நடிகை. கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப் புது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள நடிகை, சித்தாரா. இந்தப் படம் ஹிட்டானதால், அவருக்கு அதிக புகழ் கிடைத்தது. தமிழில் முதல் படமே ஹிட்டானதை அடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

இதைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கிய புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர், காவல் கீதம், என்றும் அன்புடன், ரஜினியின் படையப்பா உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இந்தப் படங்களும் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. மலையாளம், தமிழ் தவிர, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

இப்போது வயதாகிவிட்டாலும் தொடர்ந்து, அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார், சித்தாரா. தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். சீனியர் நடிகையாகிவிட்ட சித்தாரா, மற்ற நடிகைகளை போல திருமணமாகி செட்டிலாகி இருப்பார் என்றுதான் ரசிகர்கள் நினைத்திருப்பார்கள்.

ஆனால், தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருக் கிறார் அவர். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன். அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த முக்கிய நபர் என் தந்தை. அவர் இறந்த பிறகு, திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

47 வயதான சித்தாரா இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்டதற்கு, அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என்று மறுத்துள்ளார். கூடவே, வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உண்மைதான் வாழ்க்கையில் என்ன வேணாலும் நடக்கும்!