அஜித் நடிக்கும் வலிமை படத்தில், அந்த விஷயத்தை படக்குழு ரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இருந்தாலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 3 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. ஊரடங்கு காரணமாக, தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு இன்று 49 வது பிறந்த நாள். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடுகிறார்கள், அவரது ரசிகர்கள். லாக்டவுனில் நாடு இருப்பதால், கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் கூறியிருந்தார்கள், அஜித் தரப்பில். ஆனால், அதை கேட்காத ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கிடையே ‘வலிமை’ படக்குழுவிடம் பேசியபோது, ’60, 65 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதல் கட்டப் படப்பிடிப்பைத் தவிர முழு படப்பிடிப்பும் சென்னையில்தான் நடக்கிறது. இனியும் சென்னையில்தான் நடக்க இருக்கிறது. சேஸிங் காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்தோம். இப்போது அதை கேன்சல் செய்திருக்கிறோம்’ என்றனர்.

அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடித்திருந்தார். வில்லன்களாக, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, ‘100’ படத்தில் நடித்த ராஜ் ஐயப்பா ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். இதையும் படக்குழு உறுதி செய்தது. ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பரின் மகன்.

ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை, மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா காரணமாக, இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.