கொரோனா என்ற வார்த்தையைக் கேட்டாலே, தற்போது பலருக்கும் அச்சம் எழுகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவி, 30 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனாவால் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இதுவரை கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டுவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியது . சில சமயங்களில் இந்த கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் வெளிக்காட்டாமலும் பரவுவதாக தகவல் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சில முக்கியமான 6 புதிய கொரோனா அறிகுறிகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதுவரை வெளியிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளில் இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை இருந்தன. ஆனால் தற்போது கொரோனாவின் அறிகுறிகளுடன் கூடுதலாக ஆறு வகையான அறிகுறிகளை சேர்த்து வெளியிட்டுள்ளது.

இந்த அறிகுறிகளுள் ஏதேனும் ஒன்று ஒருவருக்கு தென்பட்டாலும் சற்றும் தாமதிக்காமல் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது சிடிசி வெளியிட்ட புதிய ஆறு கொரோனா அறிகுறிகள் எவையென்று காண்போம்.

கடுமையான குளிர்
பலரும் குளிர்வது போன்று இருந்தால், அதை சாதாரணமாக இதுவரை எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இனிமேல் நீங்கள் காரணமின்றி குளிர்வது போன்று உணர்ந்தால், அது கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் சற்றும் தாமதிக்காமல் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

குளிருடன் உடல் நடுக்கம்
திடீரென்று காரணமே இல்லாமல் உடல் குளிர்ச்சியுடன், உங்கள் உடல் நடுங்க ஆரம்பிக்கிறதா? உடனே உஷாராகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட கொரோனாவின் புதிய அறிகுறிகளுள் இதுவும் ஒன்று.

தசை வலி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் மயால்கியா என்னும் தசை மற்றும் மூட்டு இணைப்புக்களைச் சுற்றி வலியை அனுபவித்துள்ளனர். ஆகவே உங்களுக்கு சில நாட்களாக எந்த கடுமையான வேலையையும் செய்யாமல் தசை வலி பயங்கரமாக இருந்தால், உங்களை உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

தலை வலி
சளி பிடித்திருக்கும் போது தலைவலியை அனுபவிப்பது என்பது சாதாரணமான ஒன்று. அதேப் போன்று கொரோனா வைரஸ் ஒரு சுவாச தொற்றுநோய். ஆகவே இந்த தொற்றுநோய் ஒருவரைத் தாக்கியிருந்தால், கண்களின் மேல் மற்றும் நெற்றிப் பகுதியில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். இந்நிலையில் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோனை செய்து கொள்ளுங்கள்.

தொண்டை வலி
கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால், கடுமையான வறட்டு இருமலை மட்டும் உண்டாக்குவதோடு, வைரஸ் தாக்கத்தினால், தொண்டைப்பகுதியில் அழற்சியை உண்டாக்கி வலியையும் உண்டாக்கும். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சதவீதத்தினருக்கு வறட்டு இருமலுடன் தொண்டை வலி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சுவை அல்லது வாசனை இழப்பு
இதுவரை நீங்கள் மணம் நிறைந்த சுவையான உணவை உட்கொண்டிருந்து, திடீரென்று உங்கள் மூக்கும், நாக்கும் வேலை செய்யாமல் போவதை உணர்ந்தீர்களானால், உஷாராகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், சிடிசி வெளியிட்ட புதிய கொரோனா அறிகுறிகளுள் சுவை மற்றும் வாசனை இழப்பும் முக்கியமான ஒன்று.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் பெரும்பாலான மக்கள் வழக்கமாக அடிக்கடி சந்திக்கும் சாதாரண பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். ஆனால் தற்போது கொடிய கொரோனா வைரஸ் பரவுவதால், இந்த அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி உங்களை சோதித்துக் கொள்ளுங்கள்.

இந்த அறிகுறிகள் எப்போது தோன்றும்?
ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியிருந்தால், வைரஸ் உடலில் நுழைந்த 2-14 நாட்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும் என சிடிசி தெரிவித்துள்ளது. அதே சமயம் என்ன தான் சிடிசி கொரோனா வைரஸின் அறிகுறிகளின் பட்டியலை வெளியிட்டாலும், சில நோயாளிகள் அறிகுறி இல்லாமலும் இருக்கலாம்.