தன்னை முழுமையாய் நேசிக்காத எவரையும் தமிழ் சினிமா புகழ் என்ற உச்சத்தை தொட அனுமதித்ததில்லை என்பது பலரின் கருத்து. அந்த புகழ் என்ற கதவுகளை பல ஆண்டுக்கால முயற்சியால் முட்டித்திறந்த நடிகர்கள் பலர். மக்கள் திலகம் தொடங்கி மக்கள் செல்வன் வரை அதற்கு சான்றாக இந்த திரையுலகில் வலம்வருவோர் பலர். அந்த வகையில் 1990ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றி, அதன் பிறகு காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக இறுதியில் தலையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் அஜித் என்ற தனி மனிதன்.

காதல் கோட்டை, ஆசை, கல்லூரி வாசல் போன்ற படங்கள் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும் இன்றளவும் அவர் நடிப்பும் அந்த படங்களும் பசுமையாய் வலம்வருகின்றன. இந்நிலையில் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை எப்போதும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். உழைப்பாளர் தினமான வரும் மே 1ம் தேதி தனது 49வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் அஜித். நிச்சயம் தற்போது நிலவும் சூழலில் அவர் பெரிய அளவில் தனது பிறந்த விழாவை கொண்டாட மறுப்பார் என்பது பலர் அறிந்த விஷயம் என்றபோதும் ரசிகர்கள் அவர் பிறந்த நாளை இணைய வழியில் கொண்டாடவுள்ளனர்.

இந்நிலையில் இணையத்தில் அஜித் பிறந்த நாள் அன்று எல்லோரும் பொதுவாக ஒரு புகைப்படத்தை தங்கள் வலைத்தளங்கில் வைக்க முடிவெடுத்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை 14 கோலிவுட் பிரபலங்களை வைத்து நாளை மாலை வெளியிட உள்ளனர். தற்போது அந்த 14 பேரில் தன்னையும் ஒருவராக அழைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சாந்தனு