இயக்குநர் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் பாடலுக்கு சீரியல் நடிகர் ஒருவர் கண்கள் கலங்க வெளியிட்டிருக்கும் டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் சேரன். பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு இயக்குநராக அறிமுகமானவர்.

தொடர்ந்து, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடிக்கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதுவரை 4 தேசிய விருதுகளை பெற்றுள்ள இயக்குநர் சேரன், தமிழக அரசின் விருதுகள் மற்றும் ஃபிலிம் ஃபேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். சேரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் திருமணம். இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சேரன். அதில் சக போட்டியாளர்களான கவின், சாண்டி ஆகியோர் ஆரம்பத்தில் சேரனுடன் நட்பு பாராட்டி வந்தார். பின்னர், சரவணன், சாண்டி, மீரா மிதுன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சேரனை கார்னர் செய்தனர்.

நடிகை மீரா மிதுன் டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பிரளயத்தை கிளப்பினார். சேரன் தன்னை இரண்டு கைகளால் கட்டியணைத்து தூக்கி போட்டதாக சாண்டியை வைத்து அவர்களுக்குள் டெமோ வேறு செய்து காட்டினார். ஆனால் அவை எல்லாமே பொய் என குறும்படம் போட்டு நிருபித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன்.

அதன் பிறகும் சேரனுக்கு கஷ்ட காலம்தான். லாஸ்லியாவும் கவினும் காதலித்து வந்த நிலையில் அவர்களின் காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்துக் கொண்டு அவர் மீது கோபப்பட்டார் கவின். இதனால் கடைசி வரை சேரனை எதிரி போல் பாவித்து நடந்து கொண்டார் கவின். அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சேரனை தரக்குறைவாக விமர்சனம் செய்தனர்.

ஒரு கட்டத்துக்கு மேல் இதனை பொறுக்க முடியாத சேரன், யாருடைய காதலுக்கும் தான் எதிரியில்லை. கவின், லாஸ்லியா ஆகியோரின் பெயர்களை மீண்டும் ஒருமுறை எனது நாக்கு உச்சரிக்காது என காட்டமாக பதிவிட்டிருந்தார். ஆனாலும் கவின் ரசிகர்கள் அவரை தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தனர்.

இருப்பினும் சாக்ஷி, ஷெரின், வனிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் இயக்குநர் சேரனுடன் நல்ல நட்பையே தொடர்ந்து வருகின்றனர். வனிதாவின் மகள், வயதுக்கு வந்த நிகழ்ச்சியில் கூட இயக்குநர் சேரன், மாமா முறையில் சீர் செய்தார். சேரனின் பிறந்தநாளில் நடிகை சாக்ஷி அகர்வால் கேக்கை வாங்கி சென்று சேரன் வீட்டில் வைத்து வெட்டச்சொல்லி அன்பை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் சீரியல் நடிகரான ஃபெரோஸ் கான் சேரன் இயக்கத்தில் உருவான தவமாய் தவமிருந்து படத்தின் பாடலுக்கு டிக்டாக் செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனுடன் மல்லுக்கட்டிய கவின் போன்றே இந்த வீடியோவில் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல் சேரன் பட பாடலும் கதை சொல்லும்.. சமீபத்தில் நான் பார்த்த அருமையான டிக்டாக் வீடியோ.. என பதிவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இயக்குநர் சேரனின் டிவிட்டர் ஹேன்டிலை டேக் செய்திருந்தார்.

அந்த வீடியோவை இயக்குநர் சேரனும் லைக் செய்துள்ளார். இயக்குநர் சேரன் தவமாய் தவமிருந்து படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பல சீரியல்களில் நடித்துள்ள ஃபெரோஸ்கான் கோயமுத்தூரை பூர்விகமாக கொண்டவர். இந்த டிக்டாக் வீடியோவில் தாடியுடன் பிக்பாஸ் கவினை போன்று காட்சியளிப்பதால் அவர், ஃபெரோஸ்கானா அல்லது கவினா என சற்று குழம்பிவிட்டனர் நெட்டிசன்கள்.