கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், கேரளாவில் நடந்த மகனின் இறுதிச்சடங்கை, துபாயில் இருக்கும் பெற்றோர் பேஸ்புக் வழியாக பார்த்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா, மலசேரி, சம்மக்காவிளையல் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் துபாயில் வசித்து வருகின்றனர்.

இந்த இந்தியத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் Jeuel Jomay (16). இவர் ஷார்ஜாவில் உள்ள GEMS Millennium பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் Jeuel Jomay-வுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 2 வாரங்களாக உடல்நிலை மிகவும் மோசமடைய, துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி, கடந்த ஞாயிற்றுக் கிழமை, அதாவது ஈஸ்டர் பண்டிகையன்று Jeuel Jomay உயிரிழந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் திகதி புனித வெள்ளியன்று தான், ஜோயல் பிறந்தார், தற்போது 2020-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், தனது மகனை கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்ய Jeuel Jomay பெற்றோர் விரும்பியுள்ளனர். இதற்காக, தனது மகனின் உடலை கேரளாவுக்குக் கொண்டு செல்ல ஐக்கிய அரபு அமீரக அரசிடம் அனுமதி கோரினர்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுக்கு எந்தப் பயணிகள் விமானமும் இயக்கப்படவில்லை என்று கூறி அதிகாரிகள் மறுத்துவிடவே, அதன் பின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, சரக்கு விமானத்தில் உடலை அனுப்ப அதிகாரிகள் அனுமதித்தனர்.

ஆனால் உடன் யாரும் செல்ல அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

இதனால், நேற்று முன்தினம் எமிரேட்ஸ் சரக்கு விமானத்தில் ஜோயல் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.

பெட்டியை விமானத்தில் ஏற்றும் முன் ஷார்ஜாவில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சிறுவன் ஜோயல் உடலுக்குப் பிரார்த்தனை நடந்தது. இந்தப் பிரார்த்தனைகளை கேரளாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் அனைவரும் பேஸ்புக் மூலம் பார்த்து கண்ணீர் விட்டனர்.

தனது மகனின் உடலை சரக்கு விமானத்தில் ஏற்றும் முன் அவரின் பெற்றோர் கண்ணீர் விட்டு, முத்தமிட்டு அனுப்பினர்.

அதன்பின் கொச்சி விமான நிலையத்துக்கு எமிரேட்ஸ் சரக்கு விமானத்தில் வந்த சிறுவன் ஜோயல் உடலை பத்தினம்திட்டாவில் இருக்கும் உறவினர்கள், அதிகாரிகள் உதவியுடன் பெற்று சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

அங்கிருக்கும், தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நடந்தது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இந்தக் காட்சிகள் அனைத்தையும் துபாயில் உள்ள சிறுவனின் தாயும், தந்தையும், சகோதரர்களும் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதனர்.

இது குறித்து கேரளாவில் இருக்கும், சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், தனது மகனின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்கமுடியாத கொடுமையான சூழல் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. அந்தச் சிறுவன் இழப்பிலிருந்து அந்தக் குடும்பத்தார் மீண்டு வர இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.