உலகமே கொரோனா வைரஸ் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது. வல்லரசு நாடு என்று பெருமிதமாய் கூறிக்கொண்டிருந்த பல நாடுகளின் பொருளாதாரம் படு பாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சார்வரி புது வருடத்தில் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் பொருளாதார நிலையும் எப்படி இருக்கும், நாட்டின் மழை வளம் எப்படி இருக்கும் என்று சார்வரி வருட பஞ்சாங்கம் கணித்துள்ளது.

இந்த வருடம் சித்திரை பிறப்பு பலன்களை பார்க்கும் போது வெளிநாட்டு வணிகம் அதிகரிக்கும், தொழில் துறை வளர்ச்சி அதிகமாகும். விவசாயம் செழிக்கும். திருக்கணித பஞ்சாங்கப்படி சார்வரி வருடத்தில் ராஜவாக புதன் வருகிறார்.

இந்த ஆண்டு மூன்று மரக்கால் அளவிற்கு மழை பெய்யும். ஐந்தில் ஒரு பங்கு மழை பூமியிலும் பத்தில் மூன்று பங்கு மழை மலைகளிலும் காடுகளிலும் அரை பங்கு மழை சமுத்திரத்திலும் பெய்யும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

தானியாதிபதியாக செவ்வாய் வருவதால் நாட்டில் மழை வளம் குறைந்து நன்செய் உற்பத்தி பாதிக்கும் புன்செய் பயிர்கள் நன்கு விளையும். பசு நாயகராக கோபாலன் வருவதால் வருண யாகம், இறைவழிபாடு செய்வதன் மூலம் மழை பெய்து நாடு சுபிட்சமாக இருக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.

உணவுப்பஞ்சம்
சேனாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதியாக சூரியன் இருப்பதால் நாட்டில் சொற்ப மழை பெய்யும், விலைவாசி, தண்ணீர் தட்டுப்பாடு, அரசியல் காரணங்களுக்காக நாட்டில் கிளர்ச்சி ஏற்படும்.

காலத்தே பெய்ய வேண்டிய மழை குறைந்து உணவுத்தட்டுப்பாடு அதிகரிக்கும். நதிகளை இணைக்க அரசு முயற்சி செய்யும். விவசாயம் குறைந்து உணவுப்பஞ்சம் ஏற்படும். வருண யாகம் செய்தால் நல்ல மழை பெய்யும்.

உணவு தட்டுப்பாடு
இந்த ஆண்டு ஆனி மாதம் 7ஆம் தேதி ஜூன் 21ஆம் நாள் ஞாயிறு இரவு 11.28 மணிக்கு சூரியன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிரவேசிப்பதால் நாட்டில் வறட்சியும் உணவுத்தட்டுப்பாடும் ஏற்படும். வறட்சியை போக்கவும் உணவு தட்டுப்பாட்டை போக்கவும் அரசு பெறும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.

வெயில், மழை
ஜேஷ்ட சுத்த பிரதமை சனிக்கிழமை வருவதால் அதிக வெயிலும் புழுக்கமும் ஏற்படும். இந்த மாதம் மழை குறையும். ஆடி மாதம் சுத்த பஞ்சமி வியாழக்கிழமை வருவதால் தெய்வ அருளால் மழையும் சுபிட்சமும் ஏற்படும்.

ஆஷட சுத்த நவமி ஆடி மாதம் திங்கட்கிழமை நவமி வருவதால் நல்ல மழை பெய்யும். தானிய உற்பத்தி அதிகரிக்கும். ஜவுளி தொழில் வளர்ச்சி அடையும். நாடு சுபிட்சமடையும். தசமி செவ்வாய்கிழமை வருவதால் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறை விருத்தியடையும். அவ்வப்போது அனல் காற்று வீசும்.

மழை பெய்தால் நல்லது
இந்த சார்வரி ஆண்டில் ஆனி 10, ஆடி 8, ஆவணி 6, புரட்டாசி 4, புரட்டாசி 19,ஐப்பசி 2, கார்த்திகை 1, மார்கழி 1, தை 11, ஆகிய தேதிகளில் மழை பெய்தால் நாடு சுபிட்சமாக இருக்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.