இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8473 ஆக உயர்ந்துள்ளது. 273 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நாளை வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்னும் இந்த மாதம் முழுவதும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், மேலும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக, தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சில மாதங்களாகும். அப்போதும் மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பார்களா என்பது சந்தேகமே என்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

இதனால் பெரிய படங்களின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் மாஸ்டர் படம், தீபாவளிக்கு தள்ளிப் போகிறது. இதனால் தீபாவளி ரிலீஸுக்கு முடிவு செய்து வைக்கப்பட்டிருந்த அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இன்னும் 30 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். இதில் வெளிநாட்டு ஷெட்யூல்களும் உள்ளன.

கொரோனாவில் இருந்து சகஜ நிலைக்குத் திரும்பி, இந்தக் காட்சிகளை முடித்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடித்தாலும் உடனடியாக ரிலீஸ் செய்ய இயலாது. இதனால் இந்தப் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக இன்டஸ்ட்ரியில் கூறுகின்றனர். கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன அஜித்தின் விஸ்வாசம் மெகா ஹிட் ஆனதால் இதை சென்டிமென்ட்டாகவும் பார்க்கின்றனர். ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.

அஜித்தின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடித்திருந்தார்.