இந்திய அணியில் யுவராஜ், கோலி போன்ற சிறந்த பீல்டர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களை தவிர மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்கிறார், என பிராட் ஹாக் தெரிவித்தார்.

இந்திய அணி வீரர்கள் ஒரு காலத்தில் பீல்டிங்கில் படு மந்தமாக செயல்பட்டனர்.

யுவராஜ் சிங், முகமது கைப் வரவுக்கு பின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

இவர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் பந்துகளை தடுத்து, எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்தினர்.

கலக்கலான கேட்ச் மூலம் ரசிகர்களின் பாராட்டை வெகுவாக பெற்றனர்.

தோனி தலைமையேற்ற பிறகு பீல்டிங்கிற்கு இன்னும் அதிகமாக முக்கியத்துவம் அளித்தார்.

குறிப்பாக ரெய்னா, ஜடேஜா போன்றோர் களத்தில் துடிப்பாக செயல்பட்டனர்.

உள்வட்டத்திலும், எல்லைக் கோடு அருகேயும் கேட்ச் செய்வதில் மிக கெட்டிக்காரர்களாக விளங்கினர்.

அடுத்து, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராத் கோஹ்லியும் பீல்டிங்கில் கலக்கினார்.

இப்படி அனைவரும் பட்டையை கிளப்ப, உலகின் சிறந்த பீல்டிங் அணியாக இந்தியா உருவெடுத்தது.

இந்நிலையில், கோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா ஆகிய நால்வரில் சிறந்த இந்திய பீல்டரை தேர்வு செய்யும்படி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக்கிடம் ரசிகர் ஒருவர் ‛டுவிட்டர் மூலம் கேட்டார்.

நால்வரும் அற்புதமான பீல்டர்கள். இவர்கள் மைதானத்தின் உள்வட்டத்தில் பீல்டிங் செய்தால் மகிழ்ச்சியாக பந்துவீசுவேன்.

இருப்பினும், இவர்களில் மிகச் சிறந்த பீல்டராக ஜடேஜாவை தேர்வு செய்வேன், என்றார்.

ஜடேஜாவின் துடிப்பான பீல்டிங்கிற்கு அவரது கடின ஓட்ட பயிற்சியே காரணம்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சி நிபுணர் ராம்ஜி சீனிவாசன் கூறுகையில்:

அதிகமான எடை துாக்கி ஜடேஜா பயிற்சி செய்ய மாட்டார். ஏனெனில் கொஞ்சம் தடுமாறினாலும் காயம் அடைய நேரிடும்.ஓட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினார். விரைவாக ஓடி பயிற்சி பெற்றது, கிரிக்கெட் களத்தில் சிறப்பாக செயல்பட உதவியது, என்றார்.