அந்த வீடே விசேஷமானது. மயிலாப்பூர், பக்தவத்சலம் தெருப் பெயரே மறந்துபோய் ‘பாலசந்தர் வீடு இருக்கே’ என்றுதான் பேச்சை ஆரம்பிக்கிறார்கள். அந்த வாசலில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், பிரகாஷ்ராஜ் வரை காத்திருந்திருக்கிறார்கள். அதெல்லாம் வரலாறு. சினிமாவிற்கே புதுப்புது நடிகர், நடிகைகளை வழங்கிய அந்த இல்லத்திலிருந்து நடிக்க வந்திருக்கிறார் கீதா கைலாசம்.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகள். கைலாசத்தின் வெளிச்சம் நடமாடும் வீட்டில் அவரது நினைவின் நிழலில் அமர்ந்திருக்கிறார் கீதா. இயக்குநர் E.V.கணேஷ்பாபு இயக்கும் ‘கட்டில்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக உள்ளே நுழைகிறார். கண்ணியமும், மரியாதையும் கலந்து மெல்லிய குரலில் உரையாடலைத் தொடங்குகிறார்.

‘‘எனக்கு தியேட்டர், நவீன நாடகங்களில் பரிச்சயம் இருந்தது. கைலாசம் மறைவிற்குப் பிறகு சிறுகதைகள், நாவல் எழுதவும் ஆரம்பித்தேன். ஒரு கதை சொல்லியாகவும் என்னை உருமாற்றிக் கொள்ள முடிந்தது. அப்படியானபோதுதான் ‘குறிஞ்சி’ நாடகத்தில் என்னை கணேஷ்பாபு பார்த்திருக்கிறார்.

எங்கள் ‘மின்பிம்பங்கள்’ தயாரிப்பில் அவர் நிறைய நடித்திருக்கிறார். குடும்ப நண்பர். அவர் இந்தக் கதையைக் கூறியபிறகு அதில் ஓர் உயிர்த்தன்மை இருந்தது. உணர்வுகள் நிரம்பி வழியும் ஒரு கதையில் என்னால் பணியாற்ற முடியும் எனத் தோன்றியது.

எனக்கு நடிப்பில் பிரியம் இருப்பதை கே.பி. அவர்களும், கைலாசமும் அறிவார்கள். ஆனால், நான் ‘மின்பிம்பங்க’ளின் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக இருந்தேன். ஏராளமான தொடர்களைத் தயாரித்து, டிவி தொடர்களில் ஒரு பிரளயத்தை உண்டாக்கி இருந்த கட்டம். கைலாசத்திற்கு காலத்தை மீறிய கனவிருந்தது. புதுமையான தொடர்களை உருவாக்கி, வழக்கத்தில் இருந்தவைகளுக்கும் புது இரத்தம் பாய்ச்சினார். இத்தனை வேலைகளில் என்னால் படிக்கவோ, எழுதவோ, என் சொந்த விருப்பங்களுக்குத் தலை சாய்க்கவோ நேரம் இல்லாமல் இருந்தது.

கே.பி. அவர்களுக்கு நான் கேரக்டர்களைப் புரிந்து கொள்கிற திறன் பிடிக்கும். அவர் சொன்ன கதாபாத்திரங்களுக்குத்தக்கமாதிரி மாளவிகா, ரேவதி சங்கரன், தேவதர்ஷினி என ரெடி பண்ணிக் கொடுத்தேன். ‘கீதா, எப்படிம்மா இப்படி கேரக்டர்களுக்கே வடிவமைச்ச மாதிரி, ஆட்களைக் கொண்டாந்து சேர்க்கிறே’ன்னு சொல்வார். அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. உள்ளே க்ரியேட்டிவ் தன்மையும், சொல்றதை உள்வாங்குற விதமும் இருந்தால் எல்லாம் சாத்தியம்னு அவருக்கே தெரியும். அப்படியும் சொல்வார்.என் கல்யாணத்தின்போது நான் சி.ஏ. ICWA படிச்சு முடிச்சிருந்தேன்.

அதனாலோ என்னவோ பெரிய அட்மின்னாக இருந்து எல்லாத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுகிற வேலையைக்கொடுத்திட்டாங்க. ஆனால், எழுதுறது, படிக்கிறது. நடிக்கிறதுன்னு எல்லாமே உள்ளே கொழுந்துவிட்டு எரிஞ்சிட்டு இருக்கும். கே.பி. சாருக்கும், கைலாசத்திற்கும் எல்லாத்தையும் கையில் எடுத்திட்டு செய்கிற ஒரு கெட்டியான ஆள் வேண்டியிருந்ததும் ஒரு காரணம்.

‘மின்பிம்பங்க’ளுக்கு இருந்த ஆதரவு, ‘மர்மதேசம்’ மாதிரியான சீரியலை எல்லாம் மக்கள் மெனக்கெட்டு ரசிச்சு ரசிச்சு பார்த்தாங்க. வெளிநாடுகளில் எல்லாம் பிரசித்தம். இப்போ அடுத்தடுத்து கைலாசம், கே.பி சார்னுஎங்களை விட்டுப் போனபிறகுதான் இதில் இறங்கியிருக்கேன்.நல்ல கேரக்டர்களும், பொருத்தமான கதைகளும் அமைஞ்சால் நம்முடைய திறமையை விட்டுட்டு இருக்கணுமான்னு யோசிச்சபிறகுதான் இந்த முடிவு. வெவ்வேறு உணர்வு நிலைகளாக மாறிக்கொண்டு வருகிறபோது எடுக்கிற நல்ல முடிவாகவே இதைப் பார்க்கிறேன். அதற்கான ஆரம்பம்தான் இந்த ‘கட்டில்’ படம்.

கைலாசம், ‘Idiot Box’ன்னு வெறும் பொழுதுபோக்கா இருந்த டிவியை தன் பரந்துபட்ட அறிவால் மாற்றப்பாத்தார். காலத்தை மீறி கொஞ்சம் முன்னே போனார். அதனால்தானோ என்னவோ அவர் போட்ட பாதையில் அவரே இன்னும் பிரசாசமா நடைபோட ஆயுள் இல்லாமல் போச்சு. போபால் மக்கள் பற்றி எடுத்த போபால் விஷவாயு டாகுமெண்டரி இன்னும் மேலான அவரது அக்கறையைச் சொல்கிறது. அவரும் நான் தொடர்ந்து இயங்கிட்டு இருந்ததை விரும்பினார்.

அப்படியொரு முயற்சியாகதான் இந்த சினிமா மீடியத்திலும் இறங்கியிருக்கேன். இப்பவும் பார்க்கிற பல படங்களில் பாத்திர தேர்வுகள் நன்றாக இருக்கின்றன. கே.பி. சார் வடித்த கேரக்டர்களின் தெறிப்புகள் இன்னும் இங்கே இருக்கிறது. நாடகத்தில் நடித்ததும், கதை சொல்லியாக இருப்பதும், நடித்த நவீன நாடகங்களும் என்னை கூர்தீட்டியிருக்கின்றன. நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்…’’ சொல்லும்போது கீதாவின் கண்களின் அத்தனை ஆர்வம்! திரும்பி வரும்போது மாடிப்படியின் தாழ்வாரத்தில் புன்னகைக்கிறார் கே.பாலசந்தர்.