கோலிவுட்டின் பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

இயக்குனர் ராஜ் கபூர் நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே படங்களை இயக்கியவர். மேலும் இவர் உத்தமராசா, என்ன விலை அழகே, சமஸ்தானம், குஸ்தி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாது சிறந்த நடிகரும் ஆவார். இவரது நடிப்பில் விசில், ஐயா, மாயாண்டி குடும்பத்தார், கொடி உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.

இவருக்கு ஷாரூக் கபூர் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ராஜ் கபூரின் மனைவியும், ஷாரூக் கபூரும் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. அங்கே கடுமையான சளி மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட ஷாரூக் அங்கேயே உயிரிழந்திருக்கிறார். ஷாரூக்கிற்கு 23வயது தான் ஆகிறது.

இந்தச் செய்தியால் அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். மகனது உடலை சென்னைக்கு கொண்டு வரும் முயற்சியில் ராஜ் கபூர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.