சென்னை: கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனுஷின் டி-43 படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளார்.

அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள மாஃபியா படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிகர் பிரசன்னா மிரட்டியுள்ளார். இந்நிலையில், மீண்டும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹீரோ டு வில்லன்
மணிரத்னம் தயாரிப்பில் வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான பிரசன்னா, அழகிய தீயே, சாது மிரண்டா, நாணயம், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். 2008ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா திருட்டு பயலே 2, மாஃபியா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

மாஃபியா டான்
துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படங்களை இயக்கி உள்ள கார்த்திக் நரேன் இயக்கத்தில் விரைவில் ரிலீசாகவுள்ள மாஃபியா சேப்டர் ஒன் படத்தில் மாஃபியா டானாக பிரசன்னா நடித்துள்ளார். அருண் விஜய், பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் போதை தடுப்பு பிரிவான நார்காடிக்ஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி 21ம் தேதி மாஃபியா திரைக்கு வருகிறது.

மிஸ்ஸான வலிமை
எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் பிரசன்னாவுக்கு வில்லன் ரோல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனக்கு இந்த முறை தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது என உருக்கமான ட்வீட்டை பிரசன்னா வெளியிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

பிரேம்ஜி ஆறுதல்
பிரசன்னாவின் இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் பிரேம்ஜி, வலிமை படத்தில் வாய்ப்பு கிடைக்கலைன்னா என்ன நண்பா, எங்க அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் மங்காத்தா 2 படத்துல தல அஜித்துடன் நடிக்கீறிங்க என்பதை சிக்னல் மூலம் ட்வீட் போட்டு ஆறுதல் படுத்தினார். அந்த ட்வீட் பிரசன்னா ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது.

தனுஷுடன்
இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள டி-43 படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொங்கலுக்கு வெளியான தனுஷின் பட்டாஸ் படத்தில் பிரசன்னாவின் மனைவி சினேகா நடித்திருந்தார். தனுஷ் இயக்கிய பா. பாண்டி படத்தில் பிரசன்னா ராஜ்கிரணுக்கு மகனாக நடித்திருந்த நிலையில், தற்போது தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.