கடந்த 2008-ம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘குருவி’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், 12 ஆண்டுகள் கழித்து இந்த படம் 150 நாள் ஓடியதா..? இல்லையா.? என்பது பற்றி இப்போது ஒரு நடிகருக்கு சந்தேகம் வந்துள்ளது.

அந்தப் படத்தில் நடித்த இளம் நடிகர் பவன், ‘அசுரன்’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். அவருக்குத்தான் ‘குருவி’ படம் ஓடியது பற்றிய சந்தேகம் வந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான் ‘அசுரன்’ படம் 100 நாட்கள் ஓடியதை அடுத்து இன்று அப்படத்தின் 100 வது நாள் விழா நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய நடிகர் பவன், “நான் கடைசியாக ‘குருவி’ படத்தின் 150வது நாள் விழாவில் கலந்து கொண்டேன். எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை. ஆனால், இந்தப் படத்துல கண்டிப்பா நடந்திருக்கு,” என்றார்.

இது அந்த அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஆனால், இது எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என்பதை உணர்ந்த நடிகர் தனுஷ் வெற்றிமாறன் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு படத்தின் விழா மேடையில் விஜய் படம் பற்றி இப்படிப் பேசிவிட்டாரே என பலரும் சிரித்துவிட்டனர். விழாவின் இறுதியில் பேசிய தனுஷ், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு விளக்கம் கொடுத்தார்.

இந்த மாதிரி விழா நடக்கும் போது நாம பேசறது மட்டும் தான் நம்ம கன்ட்ரோல்ல இருக்கும். அதனால, எது சரியோ அதை எடுத்துக்குங்க, எது சரியில்லையோ அதை தயவு செஞ்சு விட்டுருங்க என்று கேட்டுக்கொண்டார்.