ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ‘தாராள பிரபு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

இசையுலகின் ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தாராள பிரபு டைட்டில் மட்டுமின்றி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வில்லங்கமாகவே உள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடித்த முதல் படமே அடல்ட் கன்டென்ட் படம் தான். அமலா பாலுக்கு ஜோடியாக ஹரிஷ் அறிமுகமான சிந்து சமவெளி படத்திற்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், தொடர்ந்து அதே போன்ற படங்களிலேயே ஹரிஷ் நடித்து வருகிறார்.

தமிழ் கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரான லிவிங் டுகெதர் கலாச்சாரம் தற்போது ஐடி துறை வருகையால் அதிகரித்து வருகிறது. அதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதுபோன்ற கதையை கொண்ட பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹரிஷ் கல்யாண் வெற்றி பெற்றார்.

இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் காதலை அடிப்படையாக வைத்து வந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. மீண்டும் அடல்ட் படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்த ஹரிஷ் கல்யாண், தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். அந்த படத்தில் அதிகமான ஆபாச காட்சிகள் நிறைந்திருந்தும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இதனால், அடுத்த லெவல் அடல்ட் படத்திற்கு முயற்சி செய்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். தாராள பிரபு எனும் தலைப்பில் விந்து அணுவை தானம் செய்யும் நபராக நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான விக்கி டோனர் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. வெறும் 5 கோடியில் எடுக்கப்பட்ட அந்த படம் 65 கோடி வரை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த படத்தின் ரீமேக்கில் தான் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.

தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை தன்யா ஹோப் தான் தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார்.

பாலிவுட்டில் வெளியான டெல்லி பெல்லி படம் தமிழில் சேட்டை என்ற பெயரில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. விக்கி டோனர் படத்திற்கு பாலிவுட்டிலேயே மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ஆதித்ய வர்மாவையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடவில்லை. இப்படி இருக்க விக்கி டோனர் ரீமேக்கான தாராள பிரபு தமிழ்நாட்டில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.