மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, தலைமுடி ஆகிய அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

நீரின் கூறு நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து, சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். ஜோதிடத்தில், மண்ணை குறிக்கும் கிரகம் சனீஸ்வரன் எனும் சனீஸ்வர பகவானாவார். மண்ணில் உதித்த உயிர்களெல்லாம் மண்ணோடு மண்ணாக மாறுவதைக் குறிக்கும் வகையில், ஆயுள்காரகன் என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

ஆயுள்காரகன் சனிபகவான் ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும்.

நவகிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவானாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் பாவ அதிபதியும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும்.

அதுவே எட்டாம் பாவம் பலமிழந்து சனி பகவானும் எட்டாம் அதிபதியும் வக்ரம், பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது.

அதுபோல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது. இதுபோன்ற ஆயுள் அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் மண் அகல் தீபம் ஏற்றி வழிபட ஆயுள்காரகன் சனைச்சர பகவானின் அருளும் அவரின் சகோதரர் யமனின் அருளும் பெற்றும் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மண் அகல் விளக்கு தீபம்
மண்ணினை குறிக்கும் கிரகம் சனீஸ்வரன் ஆவார். மண்ணினை குறிக்கும் நில ராசியான மகரத்தையும் மண் குடத்தினை ராசியாக கொண்ட கிரகமும் சனீஸ்வரன் ஆவார். மகர, கும்ப ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் எளிமையானவர்கள் மற்றும் பழமையை மறக்காதவர்கள்.

கால புருஷனுக்கு பத்தாமிடமான மகரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் அடுத்தவர் உழைப்பை மதிப்பவர்கள். எனவே மண்பாண்டம் செய்வோர் மற்றும் செக்கில் எண்ணெய் பிழியும் வணிகப் பெருமக்களையும் போற்றும் வண்ணம் மகர ராசி லக்னக்காரர்கள், மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றுவார்கள்.

கும்ப ராசிக்காரர்கள்
முக்கியமாக, கும்ப ராசி கும்ப லக்னக்காரர்கள், குடும்பத்தில் பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன் விருப்பங்களை புதைத்துவிடுவார்கள். அவர்களின் ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகளாக மண்ணை குறிக்கும் நில ராசி அதிபதிகளாக புதனும் சுக்கிரனும் வருவதால், அவர்கள் மண் அகல் விளக்கை அதிகமாக ஏற்றுவார்கள்.

எப்போதும் புதிய புதிய விஷயங்களை தேடிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். ரிஷபத்தில் சனி நின்றாலும், துலா ராசியில் சனி உச்சம் பெற்று நின்றாலும் அவர்கள் புதிது புதிதான மண் அகலை விரும்பி ஏற்றுவார்கள்.

பாரம்பரியத்தைப் போற்றுதல் என்றாலே குருவும், சூரியனும்தான். நெருப்பு ராசி மற்றும் திரிகோண ராசிகளான மேஷ, சிம்ம, தனுசு ராசி/லக்னக்காரர்கள், பாரம்பரியத்தைப் போற்றும் வண்ணமும் தர்மத்தைக் காக்கும் வண்ணமும் மண் அகல் விளக்கை ஏற்றுவார்கள்.

சனிபகவானுக்கு பரிகாரம்
ஆயுள்காரகனான சனீஸ்வரனின் அம்சமான மண் அகலில் விளக்கேற்றினால் சுத்தமான சுவாசம் அமைந்து நமக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.

குயவர்கள் எனப்படும் மண்பாண்டம் செய்வோர் மற்றும் செக்கில் நல்லெண்ணெய் ஆட்டும் வணிகர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் சனியின் காரகம் பெற்றவர் ஆவர்.

எனவே மண் விளக்குக்கும் நல்லெண்ணெய்க்கும் செய்யும் செலவு, சனீஸ்வர பகவானுக்கு செய்யும் பரிகாரமாகும்.